(Photo:DMK/Twitter)
‘ஆண்டவன் சொல்லுறான் அருணாச்சலம் செய்றான்’ என்ற ரஜினிகாந்த் பேசிய வசனத்தை சுட்டிக்காட்டி தான் சொல்வதைத் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்கின்றார் என திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இன்றைய தினம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரசார நிகழ்ச்சியில் மக்களை சந்தித்து பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் விருத்தாசலம் தனி மாவட்டமாக உருவாக்கி தரப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
அத்தோடு, கொரோனா காலத்தில் அதிமுக அனைத்து டென்டர்களிலும் ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளதுடன் விவசாயிகளுக்கு என்றைக்கும் பக்கபலமாக இருப்பது திமுக தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி விவசாயக் கடனை ரத்து செய்ய முடியாது என நீதிமன்றத்துக்குச் சென்றதாக குறிப்பிட்ட ஸ்டாலின் தற்போது வாய்க்கு வந்தபடி சலுகைகளை அறிவித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதேவேளை தேர்தல் நெருங்க நெருங்க முதலமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.முன்பு நான் என்ன சொல்கிறேனோ அதை மறுத்துக்கொண்டிருந்தார்.
ஆனால், இப்போது தேர்தல் நெருங்கிவிட்டது. நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் நிறைவேற்றி வருகிறார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் அருணாச்சல திரைப்பட வசனமான ‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான்’ என்பது போல, தான் கூறுவதைத் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார் எனவும் முகஸ்டாலின் கிண்டலடித்து பேசியுள்ளார்.