
இந்தியக் கடற்தொழிலாளர்களின் எல்லைத் தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடுகள் தொடர்பாக இந்தியா, எமது நாட்டின் மீது அதிருப்தியாக இருக்கும் என்று நான் கருதவில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேநேரம் மீனவர் பிரச்சனை தொடர்பில் எமது அரசாங்கத்தின் மீதும் இந்தியா அதிருப்தி அடையாது எனவும் இந்த விவகாரத்தில் இருக்கக்கூடிய நியாயத்தன்மை தொடர்பாக இந்தியாவிற்கு நல்ல புரிதல் இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, மீனவர் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே அமைச்சு, அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுக்கள் ஆரம்பித்துள்ள நிலையில், கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொள்வதற்கான அமைச்சர்கள் மட்டப் பேச்சுவார்த்தை தொடர்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உணர்வுகளால் உறவுகளினால் கலாசாரத் தொடர்புகளினால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் நெருக்கம் பிரிக்கப்பட முடியாதது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்ட வரலாற்றுத் தொடர்பும் இருக்கின்றது.
ஆகவே மீனவர் பிரச்சினையில் இந்தியா எமது நாட்டின் மீது புரிதலுடன் செயற்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.