July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ்நாட்டில் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் 15 பேர் பலி

(Photo:@AzeefaFathima/Twitter)

தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ  விபத்தில் 15  பேர் பலியாகியுள்ளனர்.

பட்டாசு வெடிமருந்தில் உராய்வு ஏற்பட்டதனால் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் இதில் சம்பவ இடத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில்  34 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்தத் தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வர சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அமைச்சின் அனுமதி பெற்று இயங்கும் இந்த தொழிற்சாலையில் 35 வகையான பட்டாசுகளை தயாரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பட்டாசு தொழிற்சாலையில் 30இற்கும் மேற்பட்ட அறைகள் உள்ளதுடன் 100இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிற்சாலையிலுள்ள அறையில் ஏற்பட்ட இந்தத் தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியதனால் 6 அறைகளிலும் பட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் அதிக அளவிலான பட்டாசு ஆலைகள் இயங்கி வரும் நிலையில் குறித்த பகுதியில் அவ்வப்போது போதிய பாதுகாப்பு காரணங்கள் இல்லாமையினால் இவ்வாறான விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்ப் பலிகள் ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது.

இதேவேளை சாத்தூர் வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியிலிருந்து தலா 2 இலட்சம் ரூபாய் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலா 3 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

This slideshow requires JavaScript.