July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் இருந்து பின்வாங்கும் சீனா

இந்திய மற்றும் சீன இராணுவத்தினருக்கு இடையே இடம்பெற்று வந்த எல்லைப்பிரச்சினை தொடர்பில் நடைபெற்ற ஒன்பது சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அங்கு பதற்ற சூழ்நிலை தணிந்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது இந்திய இராணுவம் எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் படைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தற்போது கிழக்கு லடாக் பகுதியில் இருந்து சீனா தனது பீரங்கிகளையும் இராணுவப் படைகளையும் பின்வாங்கத் தொடங்கியுள்ளது.

அத்தோடு அத்துமீறி அமைத்த இராணுவ முகாம்களையும் அப்புறப்படுத்தத் தொடங்கியுள்ளது.

கிழக்கு லடாக் பகுதியை ஆக்கிரமித்திருந்த சீன இராணுவத்தினர், இந்திய இராணுவத்தின் ரோந்துப் பணிகளையும் தடுத்து வந்தது.

ஆனாலும், முக்கிய சிகரங்களில் இருந்து இந்தியப் படைகள் விலக்கிக் கொள்ளப்படாது என்றும், அங்குள்ள முகாம்கள் தொடர்ந்து செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் வாயிலாக லடாக் எல்லையில் பதற்றம் தணியும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில், கிழக்கு லடாக் எல்லையில் உள்ள பாங்காங்சோ ஏரிக்கரையில் குவிக்கப்பட்ட பீரங்கிகள் உள்ளிட்ட படைகளையும் சீனா திரும்பப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிங்கர் 4 முதல் 8 வரையிலான மலைப்பகுதிகளில் சீன இராணுவத்தினர் பல்வேறு பதுங்குக் குழிகளையும் முகாம்களையும் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை இரு தரப்பினரும் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை பராமரிக்க வேண்டும். ஒரு தலைப்பட்சமாக அசல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை மாற்ற முயற்சிக்க கூடாது.

மற்றும் இரு தரப்பிலும் செய்து கொள்ளப்பட்டுள்ள அனைத்து ஒப்பந்தங்களும், புரிந்து கொள்ளுதல்களும் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்ற 3 கொள்கைகளில் உறுதியாக இருக்கிறோம் என இந்திய இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.