July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய விவசாயிகளின் போராட்டம்: கழிப்பறைகளை பயன்படுத்தவும் தடை!

இந்திய அரசின் கெடுபிடிகளுக்கு மத்தியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு கழிப்பறைகளை பயன்படுத்த முடியாதவாறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விவசாயிகளினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் பகுதியில் ஏற்கனவே மின் விநியோகம் மற்றும் நீர் விநியோகத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்தோடு குப்பைகள் சேகரிப்பதை நிறுத்துமாறு நகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு வெளியே வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கூடாரங்களில் விவசாயிகள் தங்கியிருந்து தமது ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தின் போது ஏற்படும் வன்முறைகளைத் தடுப்பதற்கு பொலிஸார் தடுப்புகளை அமைத்துள்ளதோடு, தலைநகரின் மையத்திற்கு விவசாயிகளின் உள் நுழைவையும் தடுத்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்கள் தனது வாழ்வாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தும் இந்திய அரசு இச் சட்டங்களை நீக்கக்  கோரியும் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால் தாம் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போது இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையிலும் எவ்விதமான தீர்வும் கிடைக்கவில்லை, எனினும் இதற்கான தீர்வுகள் கிடைக்கும் வரை தாம் ஆர்ப்பாட்டத்தைத் தொடரப்போவதாகவும் இந்திய விவசாயிகள் கூறியுள்ளனர்.