January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்தமை தொடர்பாக இலங்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டது’

இந்திய மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகளின் முடிவிற்காக காத்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டமை குறித்து இந்தியா தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் எவரும் இல்லை எனவும் ஜெய்சங்கர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.நாங்கள் அந்த விசாரணைகளின் முடிவிற்காக காத்திருக்கின்றோம். ஆனால் இந்த சம்பவம் குறித்து நாங்கள் கடுமையான நிலைப்பாட்டை எடுப்போம் எனவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறைகளில் இந்திய மீனவர்கள் எவருமில்லை. ஒன்பது பேர் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் இந்திய மீனவர்களின் 62 படகுகள் இலங்கையிடம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.