இந்தியாவில் பொய்யான செய்திகளைப் பரப்பி, வன்முறையைத் தூண்டும் விதத்தில் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் செயற்படுமாயின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாட்ஸ்அப், டுவிட்டர், பேஸ்புக், லின்க்ட்இன் போன்ற சமூக ஊடகங்களின் பெயர்களை நேரடியாக குறிப்பிட்டே, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி எல்லைகளில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்பாக தவறான கருத்துக்களை வெளியிட்டு, வன்முறையைத் தூண்டும் விதமாக அமைந்துள்ள டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு இந்திய மத்திய அரசு, டுவிட்டர் நிறுவனத்திடம் வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில், சுமார் 700 டுவிட்டர் கணக்குகளே முடக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பல சர்ச்சைக்குரிய டுவிட்டர் கணக்குகள் நீக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘விவசாயிகளின் அழிவுக்கு மத்திய அரசு காரணமாக உள்ளது’ போன்ற வன்முறையைத் தூண்டும் டுவிட்டர் பதிவுகள்கூட நீக்கப்படவில்லை என மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
டுவிட்டர் கணக்குகளை முடக்குவதானது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்பதால் சிலரது டுவிட்டர் கணக்குகள் முடக்கப்படவில்லை என்று அந்நிறுவனம் பதிலளித்துள்ளது.
தற்போதைய டிஜிட்டல் இந்தியாவில் சமூக வலைத்தளங்களுக்கு முக்கிய பங்குள்ளதாகவும் அவற்றை முறையாகப் பயன்படுத்தத் தவறினால், அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் உத்தரவை மதிக்காத டுவிட்டர் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கைதுசெய்யப்படலாம் என்றும் டுவிட்டர் இந்தியா நிறுவனம் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.