தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 14 ஆம் திகதி தமிழகம் வரவுள்ளார்.
அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பாஜக தேசிய தலைவர் உள்ளிட்டோர் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்களை நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசியல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கி உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை என்பது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது .
அதிமுகவுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலில் போட்டியிடும் பாஜகவுக்கு ,திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெரும் சவாலாகவே அமைந்துள்ளன.
இந்நிலையில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மிகவும் விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நேரத்தில் பிரதமரின் வருகை என்பது ஆளும் கட்சிக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது.
பல்வேறு திட்டங்களை தொடக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது .
பிரதமரின் வருகையையொட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் மிகப்பெரும் விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் மார்க்-2 என்னும் புதிய வகை பீரங்கியை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
அதனைத் தொடர்ந்து ,சென்னை கடற்கரை-அத்திப்பட்டு 4-வது ரயில் பாதை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் வழிதடங்களில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளை பிரதமர் திறந்து வைக்கவுள்ளார்.
இதேவேளை மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கவுள்ளதுடன்,காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல்லும் பிரதமரால் நாட்டி வைக்கப்படவுள்ளது.