July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழக மீனவர்களை கொலை செய்த’ இலங்கை கடற்படைக்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு

தமிழக மீனவர்கள் 4 பேரை நடுக்கடலில் வைத்து கொலை செய்த இலங்கை கடற்படையினரை கைது செய்ய உத்தரவிட கோரியும் மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 கோடி இழப்பீடு பெற்றுகொடுக்க கோரியும் இந்திய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை தமிழகத்தைச் சேர்ந்த கடல்சார் மக்கள் நல சங்கம் என்னும் அமைப்பு தாக்கல் செய்துள்ளது.

குறித்த மனுவில் கடந்த மாதம் 21ஆம் திகதி இந்திய கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் அளித்த தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படையின் மீது மீனவர்களின் படகு மோதி கடலில் மூழ்கி விட்டதாக கூறப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் பின்னர் மீனவர்கள் அளித்த தகவலின் படி உயிரிழந்த மீனவர்களை இலங்கை கடற்படையினரே கொலை செய்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்திருந்தமையும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, தமிழக மீனவர்களை பாதுகாக்கவும், அவர்களின் உடமைகளை பாதுகாக்கவும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் 4 பேரை கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் உயிரிழந்த தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 கோடி இழப்பீடு பெற்றுகொடுக்க வேண்டும் எனவும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.