இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் பேரறிவாளனை 30 நாட்கள் நன்னம்பிக்கை உறுதிமொழியின் அடிப்படையில் -பரோலில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்குமாறு கோரி தாயார் அற்புதம்மாள் தாக்கல் செய்திருந்த மனுவை ஆராய்ந்த சென்னை உயர்நீதிமன்றம் 30 நாட்கள் மாத்திரம் பரோலில் அனுப்ப தமிழக அரசிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
நீதிமன்றம் இந்த மனுவை கடந்த முறை விசாரணைக்கு எடுத்துக்கொண்டவேளை சிறைச்சாலையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2017 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியதால் அவருக்கு மீண்டும் பரோல் வழங்க முடியாது என வாதிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட்டது.
உத்தரவு கிடைத்து ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அவரை 30 நாட்கள் பரோலில் விடுவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.