July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்பு

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு இதுவரையில் 14 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறைகள் வெடித்து கங்கையின் கிளை ஆறுகளில் ஏற்பட்ட எதிர்பாராத பெருவெள்ளத்தில் சிக்கி 207 பேர் வரையில் மாயமாகியுள்ளனர்.

இந்த வெள்ளப்பெருக்கில் அங்குள்ள தொழிலாளர்கள் பலரும் சிக்கி கொண்டதுடன் ஏறக்குறைய 100 முதல் 150 பேர் பலியாகி இருக்ககூடும் எனவும் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மீட்பு பணிகள் முழுவீச்சில் இடம்பெறுவதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து கங்கை நதிக்கரையோரம் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதுடன் வெள்ளம் அதிகமாக பாயும் பகுதிகளில் உள்ள மக்கள், பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப் படுத்தப்பட்டுள்ளதாகவும் உத்தரகண்ட் அரசு தெரிவித்துள்ளது.

இந்த மீட்பு பணிகளில் இராணுவம், இந்தோ- திபெத் காவல்படை, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த குழுவினர், விமானப்படை விமானங்கள், ஹெலிகப்டர்கள் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி, நிலைமையை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார்.

இதேவேளை “உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த துரதிஷ்டவசமான சம்பவம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்” என பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் மாநிலத்துடன் ஒட்டுமொத்த நாடுமே துணை நிற்கிறது. அனைவரின் பாதுகாப்புக்காகவும் தேசமே பிரார்த்திக்கிறது.

தேசிய பேரிடர் மீட்பு படையின் பணிகள் குறித்து மூத்த அலுவலர்களுடன் கேட்டறிந்து வருகிறேன்’ எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.