
அதிமுக கொடி பொருத்தி பயணம் செய்த சசிகலாவின் காரை தடுத்து நிறுத்தி கிருஷ்ணகிரி பொலிஸார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என தமிழக பொலிஸாரிடம் அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் புகார் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் கொடியை பயன்படுத்த பல்வேறு தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
அதிமுக கொடி பயன்படுத்திய காரில் பெங்களூரில் இருந்து கிளம்பிய சசிகலா கிருஷ்ணகிரி எல்லையைத் தாண்டிய போது அவருக்கு அந்த கொடியை அகற்ற கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனையடுத்து காரில் இருந்த கொடி நீக்ககப்பட்டதாக கூறப்படுகிறது. பெங்களூரில் இருந்து அதிமுக கொடி கட்டிய காரில் வந்த சசிகலா தமிழக எல்லைக்கு வந்த போது வேறு ஒரு காரில் பயணம் செய்துள்ளார்.
ஆனாலும் தமிழகத்திற்குள் வரும் காரிலும் அதிமுக கொடி பறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோட்டிஸ் வழங்கியும் கொடி அகற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
தமிழக எல்லையான ஜுஜுவாடி வந்த நிலையில் சசிகலாவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் தமிழகம் வரும் வழியெங்கும் ஏராளமான மக்கள் திரண்டு சசிகலாவுக்கு வரவேற்பு அளிப்பதாக கூறப்பட்டாலும், சிறைவாசம் முடிந்து வரும் சசிகலா எவ்வாறு இருக்கிறார் என்பதை பார்ப்பதற்காகவே அதிகளவு மக்கள் கூடியுள்ளனர்.
தமிழகத்திற்குள் வந்த சிசகலா ஓசூர் முத்துமாரியம்மன் கோயிலில் அதிமுக துண்டை கழுத்தில் போட்டவாறு சாமி தரிசனம் செய்துள்ளது தற்போது எதிர்ப்பலைகளை கிளப்பியுள்ளது.