File Photo
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை நிறைவடைந்து ஜனவரி 27 -ம் திகதி விடுதலையான சசிகலா, இன்று பெங்களூருவில் இருந்து தமிழகம் புறப்பட்டுள்ளார்.
பெங்களூரு தேவனஹள்ளி விடுதியில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை நோக்கி பயணமாகியுள்ளார்.
இந்நிலையில் அதிமுக கொடியை காரிலிருந்து அகற்ற சசிகலாவுக்கு நோட்டீஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜூஜூவாடி எல்லையில் காவல்துறையினர் அவருக்கு நோட்டீஸ் வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சிறைத்தண்டனையிலிருந்து விடுதலையான அதேநேரம் சசிகலா கொரோனா பாதிப்பு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததுடன், கடந்த 31 -ம் திகதி, அவர் மருத்துவமனையிலிருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆனார்.
ஆனாலும் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரையின்படி, பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் சசிகலா தங்கி ஓய்வு எடுத்தார்.
இந்நிலையில் தனிமைப்படுத்தல் காலத்தை முடித்த அவர் இன்று சென்னை திரும்புகின்றார்.
பெங்களூருவின் தேவனஹள்ளியிலிருந்து சென்னை புறப்பட்ட சசிகலாவுக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு அளித்துள்ளதுடன், சென்னை வந்ததும், அத்திப்பள்ளியில் இருந்து சென்னை இல்லம் வரை சாலையின் இருமருங்கிலும் ஆதரவாளர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.
சசிகலா பயணிக்கும் காரில் டிடிவி தினகரன், ஜெய் ஆனந்த் உள்ளிட்டோர் உள்ளனர்.