November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சசிகலாவை அ.தி.மு.க வில் மீண்டும் இணைத்துக்கொள்ள வாய்ப்பே இல்லை’

தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்க டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் அதிமுக தலைமையகம் உட்பட ஜெயலலிதா நினைவிடம் என பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் மீறப்பட்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது .இந்நிலையில் சசிகலாவை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சசிகலாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன .ஆளும் அதிமுக அரசு தமது பாதையில் இருந்து தளராமல் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இருந்தபோதிலும் அதிமுகவின் முக்கிய பொறுப்பில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இதுவரை சசிகலாவின் வருகை குறித்து வெளிப்படையாக எந்த கருத்துகளையும் தெரிவிக்காதது ஏன் என பலரின் கேள்வியாக இருந்துவருகிறது.

அமைச்சர்கள் என்னதான் சசிகலாவிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தாலும் தலைமை வாய்திறக்கவில்லை என்பதால் பலரின் கவனம் தற்போது சசிகலா வருகை மீதுதான் திரும்பியுள்ளது .

இந்நிலையில் சசிகலா வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,சசிகலா அதிமுக தலைமையகத்திற்குள் நுழைந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார் .
அத்துடன் சசிகலாவும் அவரை சார்ந்தோரையும் அதிமுகவில் இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை எனவும் அவர் கூறியிருக்கிறார்.

இது இவ்வாறு ஒரு பக்கம் இருக்க சசிகலா வந்து தங்குவதற்கு சென்னை தி நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது .அங்கு தனது ஆதரவாளர்களையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக அரசு தமது பிரச்சாரங்களின் மீது கவனம் செலுத்தி திமுக விற்கு போட்டியாக தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது.

சசிகலா மீது முழு கவனமும் செலுத்தவில்லை என்ற தோரணையில் அதிமுக செயற்பட்டாலும் தமக்கான பாதுகாப்புகளை வெளியில் தெரியாதவாறு அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொண்டு தான் வருகிறது.