November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி – தமிழக முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

(File Photo)

கூட்டுறவு வங்கியில் 16 இலட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தொகையான 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக விவசாய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதன்படி தமிழக சட்டப்பேரவை விதி 110இன் கீழ் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன் சட்டப்பேரவையில் அமைச்சர்கள் அதிமுக உறுப்பினர்கள் எம்.எல்.ஏக்கள் மேசையைத்தட்டி வரவேற்றனர்.

இந்நிலையில் விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் இதன் மூலம் கடன் பெற்று விவசாயம் செய்த விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு திமுக கடந்த தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. ஆனால் தங்களது ஆட்சியில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் 2021’ இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதேநேரம் தேர்தலையொட்டிய நேரத்தில் இந்த தள்ளுபடியை அறிவித்திருப்பது ஆளும் கட்சிக்கு சாதகமாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளும் இதனை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.