இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் 62 மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படை வசம் உள்ளன என தெரிவித்துள்ள அவர் மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை இந்திய தூதரகம் வழங்கி வருவதாகவும் இதன் போது விளக்கம் அளித்துள்ளார்.
இதேவேளை, இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டமை குறித்து இலங்கையிடம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக இந்திய வெளி விவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் கொல்லப்பட்டமைக்கு தமிழக அரசியல்கட்சிகள் இந்திய நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் மீனவர்கள் கொலை செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை அரசிடம் தெரிவித்ததாகவும் இந்திய வெளி விவகார அமைச்சர் கூறியுள்ளார்.