உடன்பிறவா சகோதரி என்று தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவாலும் சின்னம்மா என்று அதிமுகவினராலும் அழைக்கப்பட்டவர் தான் சசிகலா.
1990களுக்குப் பிறகு ஜெயலலிதாவிற்கு பக்கபலமாக,அவருக்கு உற்ற தோழியாக, பணிப்பெண்ணாக என அனைத்து விதத்திலும் முதுகெலும்பாகவும் மன சாட்சியாகவும் செயல்பட்டவர். மேலும் ஜெயலலிதாவிற்காக தன் கணவரை விட்டு ஜெயலலிதாவோடு தனித்து இருந்தவர்.
அதேநேரம், சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள்,அதிமுகவில் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் சசிகலா குடும்பத்தில் இருந்து ஜெயலலிதா தேர்ந்தெடுத்த வளர்ப்பு மகன் மற்றும் அவருடைய திருமணம்,மற்றும் ஊழல் என ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்கும் ஒரு காரணமாக இருந்தார்.
தற்சமயம் ஊழல் வழக்கில் தண்டனை முடிந்து வெளியே வந்திருக்கும் சசிகலா,வருகின்ற 7 ஆம் திகதி சென்னை வர இருக்கிறார். அவர் சென்னை வரும் நிகழ்வை மிக பிரம்மாண்டமாக கொண்டாட டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளார். இருப்பினும் சசிகலா பழையபடியே அதிமுகவில் பலம் பெறுவாரா அல்லது அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இருப்பினும் நடந்த நிகழ்வுகளை சீர்தூக்கிப் பார்த்தால் சில உண்மைகள் புலப்படும்.அதன்படி சசிகலா கட்சியின் பொதுச்செயலாளர் என்று தினகரன் கூறிக்கொண்டாலும் வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும்கூட,இந்திய தேர்தல் ஆணையம் தற்போது இருக்கும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கட்சியின் சின்னம் ஆகியவற்றை ஒதுக்கி இருக்கிறது.
நீதிமன்றத்தில் வழக்கு வரும் போது கண்டிப்பாக தேர்தல் ஆணையத்தையும் பதில் மனுதாரராக நீதிமன்றம் கட்டாயம் சேர்க்கும். அப்பொழுது தேர்தல் ஆணையம் கண்டிப்பாக பின்வரும் தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்,அதன்படி சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது அதிமுக தொண்டர்களால் ஓட்டுப்போட்டு அல்ல. ஏனெனில் அதிமுகவில் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுபவர் நேரடியாக கட்சித் தொண்டர்களால் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது அதிமுகவின் சட்ட விதிகளில் இருக்கிறது. இந்த விஷயமே சசிகலாவுக்கு சாதகமாக இருக்காது.
இரண்டாவது ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது கட்சியில் பிளவு ஏற்பட்டு சின்னம் முடக்கி வைக்கப்பட்டது. இதே நேரம் சசிகலாவும் சிறைக்குச் சென்று விட்டார். பிறகு மீண்டும் கட்சியில் இணைந்த பொழுது பொதுச் செயலாளர் பதவி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ஏற்படுத்தப்பட்டது என அனைத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டே கட்சியின் சின்னத்தை மீண்டும் ஒதுக்கியது.
அவ்வாறு இருக்கையில் சசிகலாவை பொதுச்செயலாளர் என்று தினகரன் சொல்வதை நீதிமன்றம் எவ்வாறு ஏற்கும் என்பது தெரியவில்லை.
மற்றொன்று தண்டனை பெற்ற ஒருவர் திரும்பவும் தேர்தலில் நிற்க முடியுமா என்பது சந்தேகத்துக்குரிய விடயமே. மற்றொன்று சசிகலா மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்கள் தலையீடு இல்லாத இந்த காலகட்டத்தில்,எம்எல்.ஏக்கள் ஆரம்பித்து முதல்வர்கள் வரை குறுக்கீடுகள் இல்லாமல்,சூழலுக்கு உகந்த முடிவுகளை எடுத்து, தனித்தன்மையுடன், சுதந்திரமாகவும் செயல்பட்டு வருகிறார்கள். இந்த சுதந்திரத்தை இழப்பதற்கு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களோ, முதல்வரோ திரும்பவும் தயாராக இருப்பார்களா என்பது மிகப்பெரிய கேள்வி ?
ஆகவே சசிகலா தமிழகம் வந்தாலும் பழையபடி அதிமுகவில் கோலோச்ச முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.