ஈழத்தமிழர் படுகொலை உள்ளிட்ட போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்; இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச தடை விதிக்க வேண்டும்; குற்ற ஆதாரங்களை திரட்டி ஆவணப்படுத்த சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தின் நகல்கள் சட்டப்பேரவைத் தலைவர் ப. தனபால், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது;
வரும் பெப்ரவரி 22 ஆம் நாள் தொடங்கவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மீதான முக்கியமான விவாதமும் தீர்மானமும் வரவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தங்களது சார்பில் அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
நமது தமிழ் நாட்டின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்கான ஒரு முக்கியமான காலக்கட்டம் இது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
“ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை”
இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை ஜெனீவாவில் புதன்கிழமை (27.01.2021) அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விவாதம் ஜெனீவாவில் 24.02.2021 அன்று நடைபெறவுள்ளது. அதன் பின்னர், இலங்கை மீதான ஐ.நா.வின் நடவடிக்கைகளை முடிவு செய்யும் புதிய தீர்மானம் 22.03.2021 அன்று வாக்கெடுப்புக்கு வர இருக்கிறது.
கனடா,இங்கிலாந்து, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மான்டெநெக்ரோ ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டு வரவுள்ளன. அத்தீர்மானத்தை அமெரிக்காவும் ஆதரிக்கும். ஆனால், பாகிஸ்தானும் சீனாவும் தீர்மானத்தை எதிர்க்கும். இந்தியா எந்தப் பக்கம் நிற்கப்போகிறது? தமிழர்கள் பக்கமா அல்லது பாகிஸ்தான், சீனாவுடன் இணைந்தா? -என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
இது ஒரு முக்கியமான தருணம் ஆகும். இலங்கை இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு பரிந்துரைக்கவும், இலங்கை தொடர்பான சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்தவும் வகைசெய்யும் புதிய தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா கொண்டு வர வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்துவதில் ஒரு அங்கமாக ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 2013, 2015 ஆம் ஆண்டுகளில் செய்ததை பின்பற்றி, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இந்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் வழியில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிய தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் சார்பில் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.