July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது”

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொலை செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்  பிரச்சனைகள் தொடர்பில் இன்று இடம்பெற்ற ராஜ்யசபா அமர்வின் போது தி.மு.க, மற்றும் அ.தி.மு.க. கட்சி உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர், ‘தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்கள் கொலை செய்யப்பட்டது ஏற்க முடியாத நடவடிக்கை’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதால் மீன்பிடி தொழிலையே விட்டுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று திமுக எம்.பி. திருச்சி சிவா குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல அதிமுக எம்.பி தம்பிதுரை, மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் குறித்து அரசு விரைந்து நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் தமிழக மீனவர்களை தாக்குவது இலங்கை இராணுவத்தின் வழக்கமான நடவடிக்கையாக இருந்து வருகிறது எனவும் குற்றம்சாட்டினார்.

இதன்போது ‘தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்ட தகவலை அறிந்ததுமே மேல் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுத்தது. இந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது  என்று இந்திய வெளியுறவு அமைச்சர் கருத்து வெளியிட்டதன் பின் சபையில் விவாதம் முடிவுக்கு வந்தது.