July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக ஆளுநரின் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார் ஸ்டாலின்!

திமுக, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையில் தமிழக ஆளுநரின் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

அத்தோடு கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இன்று காலை, தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரை ஆளுநர் பன்ரிவால் புரோகித் ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.

இதன்போது ஆளுநர் தனது உரையை ஆரம்பிக்கும் முன்பே திமுக எம்.எல்.ஏ.க்கள் எழுந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்போது, மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதி போதாது. தமிழகத்திற்கான திட்டங்களும் ஏதுமில்லை  என்று கூறியவாறே பேசுவதற்கு முயற்சித்தார் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்.

அதனை எதிர்கொண்ட ஆளுநர் பன்வாரிலால், மத்திய பட்ஜெட்டில் தமிழக திட்டங்களுக்காக 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அவர் முதலில் அவை நடப்பதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அத்துடன் தமது உரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் வெளிநடப்பு செய்து விட்டு மீண்டும் வாருங்கள்; விவாதிக்கலாம் என்று கூறினார்.

ஆனால் அதனை மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்ததையடுத்து உடனே தி.மு.க, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து தனது உரையை தொடர்ந்தார் பன்வாரிலால்.

சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்த மு.க.ஸ்டாலின், ஊழல் தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் அளித்த போதும் நடவடிக்கை எடுக்கவில்லை. ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் ஆளுநர் முடிவு எடுக்கவில்லை. ஆகிய இரு காரணங்களை முன்வைத்து ஆளுநர் உரையை புறக்கணித்ததாக தெரிவித்தார்.

அத்துடன் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.