July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மீனவர்களை கொலை செய்த இலங்கை கடற்படையினரை சர்வதேச விதிகளின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’

தமிழ் நாட்டு மீனவர்களை மனித நேயமற்று கொலை செய்த இலங்கை கடற்படை மீது தமிழ்நாடு அரசு உடனடியாக கொலைவழக்கு தாக்கல் செய்து, சர்வதேச விதிகளின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துவதாகத் தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய தமிழக மீனவர்கள், ஈழ மீனவர்களுடன் சுமுகமான ஒரு நல் உறவை வளர்த்துக் கொள்வதற்கும் தமிழ்நாட்டு அரசு உறுதியான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கொடூரச் செயலையும், இந்த சம்பவத்தைப் புரிந்த ஸ்ரீலங்கா கடற்படையினரையும் தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷ அவர்கள் நாட்டின் ஆட்சிக்கு வந்தது முதல் எமது தொல்லியல் மத அடையாளங்களை அழிக்கும் செயற்பாடுகளையும் அதிகரித்து முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தமது தொப்புள்கொடி உறவான தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களையும் அதிகரித்துள்ளது. அதன் உச்சக்கட்டமாகத்தான் நான்கு தமிழ்நாட்டு மீனவர்கள் கொலையும் உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரை 800க்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்களை ஸ்ரீலங்கா கடற்படை கொன்ற போதும், அதன் மீதான இந்திய மத்திய அரசின் அணுகுமுறை என்பது வெறும் கண்துடைப்பாகவே உள்ளது எனவும் கூறியுள்ளது.

ஸ்ரீலங்கா கடற்படை மீது கடந்த காலங்களில் சர்வதேச நடைமுறையின் கீழ் இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இது போன்ற சம்பவங்களைத் தடுத்திருக்க முடியும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிப்பதில் தமிழ்நாடு அரசு  முக்கிய பங்கு வகிக்காமையும் இவ்வாறான செயல்கள் தொடர்ச்சியாக இடம்பெறக் காரணமாக அமைந்துள்ளது என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.