November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியா – சீனாவிற்கு இடையிலான உறவுகளை லடாக்கில் இடம்பெற்ற சம்பவங்கள் மிகவும் மோசமாக பாதித்தன’

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் கடந்த வருடம் லடாக்கில் இடம்பெற்ற சம்பவங்கள் காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முக்கியமான கட்டத்தில் உள்ளன என தெரிவித்துள்ள அவர் மேற்கொள்ளப்படவுள்ள தெரிவுகள் இருநாடுகளுக்கும் மாத்திரமின்றி முழு உலகிற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.

இந்த சம்பவங்கள் துருப்புகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான உறுதிப்பாட்டை புறக்கணிப்பது மாத்திரமல்லாமல் அமைதியை மீறுவதற்கான விருப்பத்தையும் வெளிப்படுத்தின எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வரை அந்த பகுதியில் பெருமளவு துருப்பினரை குவித்துள்ளது ஏன் என்பது குறித்து சீனா தெளிவுபடுத்தவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவிற்கு சீனா எவ்வாறு பல தடைகளை உருவாக்கியது என குறிப்பிட்ட அவர் கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வை காண்பதற்கு பதில் 2020 இடம்பெற்ற சம்பவங்கள் எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை கடும் அழுத்தத்திற்கு உட்படுத்தியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

பரஸ்பரநன்மதிப்பு, பரஸ்பர உணர்வுகளை மதித்தல் மற்றும் பரஸ்பர நலன்கள் ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே உறவுகளை வலுப்படுத்த முடியும் எனவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.