July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் தமிழகத்தில் அரசு விழாவாக கொண்டாடப்படும்’

(Photo:Edappadi K Palaniswami/Twitter)

தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள ஜெயலலிதாவின் 9 அடி உயர முழு உருவச்சிலையை திறந்துவைத்து உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளர்.

இதன்போது பெண்கள், குழந்தைகளுக்கு அரணாக விளங்கிய ஜெயலலிதாவின் வழியில் அதிமுக அரசும் செயல்பட்டு வருகிறது.

எனவே இனி ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும். தற்போது திறக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கும் மரியாதை செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜெயலலிதா வசித்த ‛வேதா நிலையம்’ இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்பட்டு அதனை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.

இந்த விழாவில்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சென்னை போயஸ் கார்டனில் அவர் வசித்த வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஜெயலலிதா முக்கிய தலைவர்களுடன் இருக்கும் படங்கள் உட்பட அனைத்து புகைப்படங்கள் அவர் பயன்படுத்திய பொருட்கள், பூஜை பொருட்கள் போன்றவை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.