இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்ற விசாரணையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் ஈழத்தமிழர்களின் கண்ணியத்தை காக்கும் விதமான நிர்வாக மற்றும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதில் இலங்கை அரசு தோற்றுவிட்டது. மேலும் சமத்துவம், நீதி,கண்ணியம், சுயமரியாதை ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற, இந்தியாவின் நோக்கத்திற்கு எதிராக, இலங்கை அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் போர்க்குற்ற விசாரணையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் இலங்கையின் செயல்பாடுகள் இருக்கின்றன. ஈழத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் சுதந்திரமான விசாரணை நடைபெறுவதற்கான சூழ்நிலையை இந்தியா உருவாக்க வேண்டும்.
மேலும் தற்போதைய முக்கிய தேவையான இலங்கையின் 13வது அரசியல் சட்ட திருத்தத்தை முழுமையாக செயல்படுத்தவும், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு ஈழத் தமிழர்களுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.