July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அம்மாவின் ஆட்சியை அமைப்போம்’: ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி

(Photo: Edappadi K Palaniswami/ Twitter)

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வுக்காக தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் மலர் வளையம் வைத்தும், ஜெயலலிதா முழு உருவப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு மிகப் பிரமாண்டமான எழில்மிகு தோற்றத்துடன் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி ஏற்கனவே சட்ட சபையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அருகே ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்திற்காக இந்திய மதிப்பீட்டின்படி 50.80 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதனை சார்ந்த கட்டமைப்புகள் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெண்களுக்காக பல்வேறு முன்னோடி திட்டங்களை வழங்கியதுடன் உள்ளூராட்சிகளில் பெண்களுக்கு 50 வீத இட ஒதுக்கீடு வழங்கிய பெருமையும் ஜெயலலிதாவையே சேரும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அத்துடன், “மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம்” எனவும் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.