July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறையில் இருந்து விடுதலையானார் சசிகலா

(File Photo)

தமிழகத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனைப் பெற்று சிறையில் இருந்த சசிகலா, இன்று விடுதலையானார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சசிகலா,  விடுதலை ஆனதற்கான உத்தரவு மருத்துவமனையில் சசிகலாவிடம் வழங்கப்பட்டது.

இதேவேளை சசிகலா விடுதலையை முன்னிட்டு, அவர் சிகிச்சைப் பெற்றுவரும் மருத்துவமனை வளாகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

சசிகலாவை வரவேற்க பெங்களூரு மருத்துவமனை முன்பு காத்திருந்த அவரது ஆதரவாளர்கள், இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், சசிகலா அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் 2017 பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சசிகலாவுக்கு கடந்த வாரம்  சிறையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

அவருடன் சிறையில் ஒரே அறையில் தங்கியிருந்த இளவரசியும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.

இதற்கமைய தற்போது சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி சசிகலா விரைவில்  மருத்துவமனையில் இருந்து வெளியேறி தமிழகம் புறப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.