November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெல்லியில் தொடரும் பதற்றம்: பெரும்பாலான பிரதான சாலைகள் மறுஉத்தரவு வரை மூடப்பட்டன

(Photo: Sherbir Panag/Twitter)

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் இன்றைய தினம் குடியரசு தினத்தில் முன்னெடுத்த டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்துள்ளதையடுத்து, தலைநகர் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியின் பெரும்பாலான பிரதான சாலைகள் மறுஉத்தரவு வரும்வரை மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி எல்லையில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தியபோது திடீரென டிராக்டருடன் ஒரு குழுவினர் டெல்லிக்குள் நுழைந்தனர்.

இதனையடுத்தே பொலிஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த உயர்மட்ட கூட்டத்தில், உள்துறை செயலாளர் அஜய் பல்லா, டெல்லி காவல் ஆணையர் எஸ்.என். ஸ்ரீவஸ்தவா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

டெல்லியின் பல பகுதிகளில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் குறித்து அவருக்கு எடுத்துரைக்கப்பட்டதுடன் அனுமதி வழங்காத பகுதிகளில் நுழைந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தடுப்பை மீறியது குறித்தும் அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

டெல்லியில் இணையதள சேவை துண்டிப்பு

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியால் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலையில் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னிட்டு போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி என்.சி.ஆர் பகுதிகளில் சில இடங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சிங்கு, காஜிப்பூர், திக்ரி, முகர்பா சவுக், நங்க்லோய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இவ்வாறு இணை சேவை தற்காலிக முடக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் விவசாயி உயிரிழப்பு

விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது பலர் காயமடைந்துள்ளதுடன் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் தான் அவர் உயிரிழந்தார் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனினும் டிராக்டரை கொண்டு தடுப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது டிராக்டர் கவிழ்ந்து குறித்த விவசாயி உயிரிழந்தார் என பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

சொங்கோட்டையில் கொடி

இதனைத் தொடர்ந்து, அனுமதி வழங்காத பகுதிகளிலும் பேரணி சென்றதுடன் டெல்லி செங்கோட்டையில் நுழைந்த விவசாயிகள், கோபுரத்தில் ஏறி தங்களின் கொடிகளை அத்துமீறி ஏற்றியுள்ளனர்.

செங்கோட்டையை சுற்றி விவசாயிகள் திரண்டிருப்பதால் பரபரப்பான நிலைமை எற்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளுக்கு  வேண்டுகோள்

இதேவேளை ‘சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம்’ என போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு டெல்லி பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டெல்லியில் நிலவும் காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாக பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,  அனைத்து உண்மையான விவசாயிகளையும் டெல்லியிலிருந்து கிளம்பி எல்லைக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பலத்த பாதுகாப்பு

இந்நிலையில், செங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் டெல்லியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

செங்கோட்டையை சுற்றிலும் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.