November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெல்லி டிராக்டர் பேரணி: விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகை பிரயோகம்

(Photo: Twitter/ Bharatiya Kisan Union)

புதுடெல்லியில் டிராக்டர்  பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

அனுமதி வழங்கப்பட்ட இடத்தை விட்டு டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீதே இவ்வாறு கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, குடியரசு தினத்தில் நிபந்தனைகளுடன் விவசாய சங்கங்கள் டிராக்டர் பேரணி நடத்தமுடியும் என ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று விவசாய சங்கங்களுக்கு வழங்கிய நேரத்திற்கு முன்னதாக, அனுமதியை மீறி சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட், சிங்கு எல்லை வழியாக டிராக்டர்  பேரணி டெல்லிக்குள் நுழைந்த நிலையில் கண்ணீர் புகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை குடியரசு தினமான இன்று மிகப் பெரியளவில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்‌ஷர்தம் என்ற பகுதியில் விவசாயிகள் மீது பொலிஸார் தடியடி நடத்தியதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குடியரசு தினத்தில் கிட்டத்தட்ட 2 இலட்சம் டிராக்டர்களுடன் பேரணி நடந்துவருவதால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசு நாளான இன்று விவசாயிகள் இணைந்து மாபெரும் டிராக்டர் பேரணியை முன்னெடுக்கின்றனர். இதில் இலட்சக்கணக்கான டிராக்கடர்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.