சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சசிகலா புதன்கிழமை(27) விடுதலையாகின்றார் என டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
நமது அனைவரினதும் எதிர்பார்ப்பின்படி சசிகலா 27 ம் திகதி விடுதலையாகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர் உடல்நிலை தேறி வருவதால் மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூர் மருத்துவமனையில் இருந்து வரும் நேரம் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவரின் தண்டனை காலம் முடிந்து ஜனவரி 27ஆம் திகதி விடுதலை செய்யப்படுவார் என சிறை நிர்வாகம் அறிவித்தது.
சசிகலா 27ஆம் திகதி விடுதலை ஆக இருந்த நிலையில், கடந்த வாரம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதனைத் தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டதனால் சசிகலா 27ஆம் திகதி விடுதலை செய்யப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் சசிகலாவின் உடல் நலத்தில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், சசிகலாவின் விடுதலை குறித்து டி.டி.வி.தினகரன் ட்வீட் செய்துள்ளார்.