July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” :புதிய வியூகத்துடன் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம்

(Photo: DMK/Twitter)

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் 234 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய பிரசாரத் திட்டம் தொடர்பில் இன்று சென்னையிலுள்ள கலைஞர் இல்லத்தில் வைத்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.

அதன்படி, தனது முதலாவது பிரசாரக் கூட்டம் திருவண்ணாமலையில் தொடங்குவதாகவும் அங்கு மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று பரிசீலிக்கவுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திமுக ஆட்சி அமைந்ததும், 100 நாட்களில் அம்மனுக்களை பரிசீலித்து விசாரிக்க ஒரு தனித்துறை உருவாக்கப்படும் எனவும் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக செய்ய தவறியதை திமுக செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தமிழகத்தின் கடன் சுமை 5 இலட்சத்தை தாண்டியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் 1 கோடி தமிழக குடும்பங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக, பல்வேறு மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி அவர்களின் பிரச்சனைகளை, கோரிக்கைகளை நேரில் கேட்டு வந்தேன்.

அதன் அடுத்தப்பகுதியாக, எதிர் வரும் 29 ஆம் திகதி முதல் 100 நாட்கள், 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கிற பெயரில் சந்திக்க உள்ளேன் எனவும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.