July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழ்நாட்டு மீனவர்களை கொலை செய்த இலங்கை கடற்படை மீது கொலைவழக்கு பதிவு செய்ய வேண்டும்’

தமிழ்நாட்டு மீனவர்களை கொலைசெய்த இலங்கை கடற்படை மீது கொலைவழக்கு பதிவு செய்து சர்வதேச விதிகளின் கீழ் கைது செய்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவர இந்திய ஒன்றிய அரசிற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என மே 17 இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை கடற்படையினரின் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இந்த மனிததன்மையற்ற செயல் இனப்படுகொலைக்கு ஒப்பானது என தமிழ் நாட்டின், மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலும் அதிகரித்துள்ளது என குறித்த இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரை 800-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கொன்ற போதும், அதன் மீதான இந்திய அரசின் அணுகுமுறை பெயரளவிற்கு மட்டுமே உள்ளது எனவும் இலங்கை கடற்படை மீது சர்வதேச நடைமுறையின் கீழ் இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இது போன்ற சம்பவங்களை தடுத்திருக்க முடியும் எனவும் மே பதினேழு இயக்கம் மேலும் தெரிவித்துள்ளது.

கச்சத்தீவை மீட்கவும், பாரம்பரிய மீன்பிடி பகுதியில் தமிழர்கள் மீன்பிடிப்பதை உறுதி செய்யவும் தமிழ்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டள்ள குறித்த இயக்கம் இலங்கை மீதான இந்திய ஒன்றிய அரசின் வெளியுறவுக் கொள்கையை தமிழ்நாடு அரசே தீர்மானிக்கும் என்று சட்டமன்றதில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இத்துடன் தமிழ்நாட்டு மீனவர்களின் படுகொலைக்காக இலங்கை அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மே பதினேழு இயக்கம் குறிப்பிட்டுள்ளது.