January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கொலை செய்ய சதி முயற்சி’ : கைதான இளைஞரின் வாக்குமூலத்தால் பரபரப்பு

புதுடெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களை கொலை செய்வதற்கு திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸாரின் விசாரணையில் குறித்த இளைஞர் வழங்கியுள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று சிங்கு எல்லையில் விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் முகமூடி அணிந்த ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதை கவனித்த அங்கிருந்த சிலர் அவரைப் பிடித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த இளைஞர் போராட்ட களத்தில் கலவரத்தை மேற்கொண்டு விவசாய சங்கத் தலைவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சுதந்திர தின விழா அன்று நடக்கவுள்ள டிராக்டர் பேரணியை தடுப்பதற்கும் குறித்த இளைஞருக்கு பயிற்சி கொடுத்து அனுப்பப்பட்டதாகவும் விவசாயிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சந்தேக நபரிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தங்களுக்கு பொலிஸ் உடையில் இருந்த ஒருவரே பயிற்சி அளித்ததாகவும் விவசாயிகளின் போராட்டத்திற்கு களங்கம் விளைவிக்கும் வண்ணம் போராட்டம் நடக்கும்போது துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற ‘ஜாட்’ போராட்டத்தின் போதும் கர்னல் மாவட்டத்தில் நடந்த பேரணியின் போதும் இது போன்ற கலவர செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் கைதான இளைஞர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.