October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை – இந்திய மீனவர் விடயத்தில் எது நடக்கக் கூடாதோ அது நடந்துவிட்டது’

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது நான்கு மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏற்பட்டு விடும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன். எனினும் எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது இப்போது நடந்திருக்கின்றது என்று அமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்கள் இந்தியக் கடற்றொழிலாளர்களாக இருப்பினும், அவர்களும் என்னுடைய தொப்புள் கொடி உறவுகளே என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் நாம் துன்பத்தினை சுமந்த வேளைகளில் எல்லாம் எமக்காக உரிமையுடன் குரல் கொடுத்தவர்கள் – எமக்காக துடிப்பதற்கு பாரத தேசம் இருக்கின்றது என்ற நம்பிக்கையை எமக்கு இன்றும் ஏறபடுத்திக் கொண்டிருப்பவர்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடப்பதை தடுக்கும் நோக்கில் உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிந்து கொள்ளுவதற்கு தேவையான நடவடிக்கைகளை பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையில் மேற்கொண்டுள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள் எந்தளவிற்கு இழப்புக்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டவன் என்ற அடிப்படையில், இந்தியக் கடற்றொழிலாளர்களும் இச்சந்தர்ப்பத்தில் உணர்ச்சி வசப்படாது புத்திசாதுரியமாக எதிகால நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் முழுமையாக தடுக்கப்பட வேண்டுமாயின் இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பான பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன் எனவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.