January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கடற்படையினருக்கு எதிராக தமிழக மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானம்

இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு மோதி உயிரிழந்த இந்திய மீனவர்களுக்கு நீதி கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்ததுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

நாளை மறுதினம் 24 ஆம் திகதி முதல் தங்கச்சி மடத்தில் இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவரது படகில் மேசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம் ஆகிய நான்கு மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர்.

அவர்கள் நெடுந்தீவுக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்யப் போவதாக எச்சரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் அங்கிருந்து தப்ப முயன்ற போது இலங்கை கடற்படை ரோந்து படகு மீனவர்களின் படகில் மோதியதால் அந்த படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்த மீனவர்களின் சடலங்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ சங்க தலைவர்கள் தங்கச்சி மடத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி உயிரிழந்த நான்கு மீனவர்களின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டு தமிழக மருத்துவர்களால் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

நடுக்கடலில் மீனவர்களின் படகை மூழ்கடித்த இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும், மீனவர்களின் உடலை தமிழகம் எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் மீனவர்களின் படகை மூழ்கடித்த இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதன்படி இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றி உயிரிழந்த மீனவர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும், இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி செயல்படும் இலங்கை அரசை கண்டித்தும் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் கடலோர மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து தங்கச்சி மடத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.