January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி இல்லை; டெல்லி போக்குவரத்துப் பொலிஸார் அறிவிப்பு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இரண்டு மாத காலமாக விவசாயிகள் டெல்லியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் .

இந்நிலையில் குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம் நடத்தி தமது எதிர்ப்பை தெரிவிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் டிராக்டர் பேரணிக்கு அனுமதி இல்லை என டெல்லி போக்குவரத்து பொலிஸார் தற்போது தெரிவித்திருக்கிறார்கள். இதேவேளை, குடியரசு தின பேரணி நடைபெறும் தூரமும் குறைக்கப்படும் என டெல்லி போக்குவரத்து பொலிஸ் இணை ஆணையர் மணீஷ் அகர்வால் தெரிவித்திருக்கிறார் .

மேலும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குடியரசு தின விழாவை பாதிக்கும் வகையில் விவசாயிகளின் எந்த ஊர்வலத்திற்கும் பேரணிக்கும் அனுமதி இல்லை என போக்குவரத்து பொலிஸ் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் இடையே 10 கட்டங்களாக இதுவரை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாகவும் அதுவரை போராட்டங்களை நிறுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் யோசனையை விவசாய அமைப்புகள் தற்போது பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சட்டம் ஒழுங்கு கெடாமல் அமைதியான முறையில் டெல்லியில் தான் தங்களுடைய டிராக்டர் பேரணி நடைபெறும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தயார் நிலையில் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசோ டிராக்டர் பேரணியை நடத்த கூடாது என்று தெரிவித்துள்ளது.

டெல்லிக்கு வெளியில் எல்லையில் மட்டுமே பேரணி நடத்தலாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் டெல்லிக்குள் பேரணியை நடத்தி தங்களுடைய ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டுமென்பதே தங்களுடைய நோக்கம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.