July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஸ்கோர் செய்த எடப்பாடி; என்ன செய்யப் போகிறார் சசிகலா?

சசிகலா விடுதலையாக இருப்பதை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மிக பிரம்மாண்ட கார் அணிவகுப்பு மற்றும் வரவேற்பை அவருக்கு வழங்க முடிவு செய்திருந்தது.

இதேநேரம் சசிகலா வந்துவிட்டால் கட்சியின் தலைமை மாறுமா? எம்எல்ஏக்கள்,அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அவரை நோக்கி செல்வார்களா?என்று ஒரு ஐயம் எதிர்கட்சியினர் மட்டுமன்றி ஆளும் அதிமுக கட்சிக்கு உள்ளேயும் இருந்தது.

ஏனெனில்,இதுவரையிலும் சசிகலாவை எதிர்த்து கட்சித் தலைமை, அதாவது இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி எதுவும் சொல்லாமல் இருக்கவே,இந்த சந்தேகம் அனைவருக்கும் வலுப்பெற்றது.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் பிரதமரையும் அமித்ஷாவையும் சந்தித்த பிறகு அளித்த பேட்டியில், அதிமுகவிற்கும் சசிகலாவுக்கும் சம்பந்தம் கிடையாது என்று வெளிப்படையாக கூறி அதிமுகவிற்குள் ஒரு தெளிவை உண்டு பண்ணி இருக்கிறார்.

ஏற்கனவே முதல்வர் கனவில் இருந்த ஓபிஎஸ்ஸின் வாயாலேயே தன்னை முதல்வராக அறிவித்ததன் மூலம் சிறந்த நிர்வாகியாக அறியப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்நேரத்தில் 27 ஆம் திகதி சசிகலா விடுதலை ஆகிறார் என்று அறிந்ததும் அதே நாளில் ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறக்கும் நிகழ்வை அதே 27ஆம் திகதியே வைத்து மிகச் சிறந்த ராஜதந்திரி தான் என்பதை தன் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் உணர்த்தி இருக்கிறார்.

ஜெயலலிதாவின் நினைவிட திறப்பையாெட்டி கட்சியின் கடைக்கோடி தொண்டர் வரை நினைவிடத்தை நோக்கித் தான் வருவார்கள்,யாரும் சசிகலாவை நோக்கி செல்ல மாட்டார்கள். மேலும் ஊடகத்தின் பார்வை முழுவதும் ஜெயலலிதாவின் நினைவிடம்,முதல்வர் எடப்பாடி என்று இவர்களை சுற்றி சுழன்று கொண்டிருக்கும் என்று சிறப்பாக கணித்து தான் ஒரு ராஜதந்திரி என்பதையும் நிரூபித்து இருக்கிறார்.

27 அன்று விடுதலையாகும் சசிகலா இதற்கு என்ன எதிர்வினையாற்ற போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.