July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறுவதாக இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டம்!

தமிழக மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகுகளை அரசுடைமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கை கடற்படையின் தொடர் சிறைபிடிப்பு மற்றும் கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறுவதைக் கண்டித்தும் இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மீனவர்களின் இக் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் 11வது நாளாகவும் விசைப்படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த டிசம்பர் மாதம் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட போதும் அவர்களின் பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு விசைப்படகுகளை அரசுடைமையாக்குவதாக ஊர்க்காவற்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் இலங்கை அரசு இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் இராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, 1974 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை உண்டு என்பதை மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இப் போராட்டம் காரணமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நேற்று சென்னை விமான நிலையத்தை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.