
இந்தியாவில் சுகாதார பணியாளர்கள் சிலர் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை பயன்படுத்துவதற்கு மறுப்பு தெரிவிப்பது குறித்து மத்திய அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரசிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், தாதிமார், சுகாதார பணியாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை பயன்படுத்துவதற்கு அச்சமடையக்கூடாது என மத்திய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியாவின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களும் அரசாங்கத்தின் ஆயோக் என்ற புத்திஜீவிகள் அமைப்பும் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான மக்கள் வதந்திகளிற்கு பலியாக வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள அதேவேளை, கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய சிறிய பாதிப்புகளிற்காக மக்கள் தடுப்பு மருந்தினை பயன்படுத்துவதை தவிர்க்ககூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளன.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை உருவாக்குவதில் கடுமையான உழைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள என்ஐடிஐ ஆயோக்கின் உறுப்பினர் மருத்துவர் விகே போல், எங்கள் சுகாதார பணியாளர்கள் குறிப்பாக மருத்துவர்கள் அதனை பயன்படுத்த முன்வராவிட்டால் அது மிகவும் கவலையளிக்கும் விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த தொற்றுநோய் அடுத்து என்ன விதத்தில் மாற்றமடையும் என்பது தெரியாது என குறிப்பிட்டுள்ள அவர், அது எவ்வளவு ஆபத்தானதாக மாறும் என்பதும் தெரியாது. இதன் காரணமாக அனைவரும் தடுப்பு மருந்தினை பயன்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தடுப்பு மருந்துகளை பயன்படுத்துவதால் மோசமான விளைவுகள் ஏற்படும்,பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்ற அச்சங்கள் ஆதாரமற்றவை, முக்கியத்துவமற்றவை என தெரிவித்துள்ள அவர் இரண்டு தடுப்பு மருந்துகளும் பாதுகாப்பானவை எனவும் தெரிவித்துள்ளார்.
மோசமான விளைவுகள் ஏற்பட்டால் அதனை கையாள்வதற்கு தயாராகவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.