சென்னையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27ஆம் திகதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 27 ஆம் திகதி புதன்கிழமை காலை 11 மணியளவில் முதலமைச்சர் தலைமையேற்று நினைவிடத்தைத் திறந்து வைக்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்விற்குத் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழக முதலமைச்சரே திறந்து வைப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மோடியைச் சந்தித்து திரும்பிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை, 27ஆம் திகதி சசிகலா விடுதலையாவது உறுதியாகியுள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அன்றைய தினமே ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.