July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

File Photo : Twitter/Narendra Modi/Edappadi Palanisamy

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு டெல்லி சென்றுள்ளார்.

இவ் விஜயத்தில் அவர் இந்திய பிரதமர் மோடியையும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.

டெல்லியில் உள்ள தமிழக அரசு இல்லத்தில் தங்கிய அவர், முதல் நிகழ்ச்சியாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதன் போது நிவர், புரவி புயல்கள் பாதிப்புக்கான நிவாரணம், நிரந்தர கட்டமைப்பு மேம்பாட்டு நிவாரணம் போன்றவற்றை வழங்கும்படி அமித்ஷாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவும் இடம்பெற்ற உள்ளதாக ஏற்கனவே அ.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

எனவே கூட்டணி தொடர்பாகவும், தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவிடம் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு நிதி உதவிகளை தமிழகத்திற்குத் தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதில் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம், நடந்தாய் வாழி காவிரி திட்டம், காவிரி படுகை சுத்தப்படுத்துதல் திட்டம் ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் நிவர், புரவி புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும், மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி மனு ஒன்றையும் முதலமைச்சர், பிரதமரிடம் கையளித்துள்ளார்.

தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு துறைகளின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.19 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டுக்காக வழங்கவேண்டியுள்ள ரூ.9 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் தமிழ் நாட்டில் நிறைவடைந்துள்ள 2 திட்டங்களைத் தொடங்கி வைக்க வேண்டும் என்றும் புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கும் படியும் இவ் சந்திப்பின் போது அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்பின்னர் தமிழக சட்டசபைத் தேர்தலை இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக விவாதித்துள்ளதாகவும் முக்கிய முடிவுகளை இருவரும் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சசிகலா தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதன் போது சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதுடன் அவரை அ.தி.மு.கவில் இணைத்துக் கொள்ள 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.