(Photo: DMK/Twitter)
ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு பயணம் செய்துள்ளார் என திமுக தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில இடம்பெற்ற கிராமசபைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில் சசிகலாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்தித்துள்ளார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் முதலமைச்சர், விவசாயிகள் பிரச்சனையைத் தீர்க்க டெல்லிக்கு செல்லவில்லை. எதிர்வரும் 27ஆம் திகதி சசிகலா வெளியே வரும் போது அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும். இதனால், ஆட்சியை தக்க வைக்கவே அவர் டெல்லிக்கு சென்றுள்ளார் எனவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அதிமுக., ஆட்சியில் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலன் மீது எவ்வித அக்கறையும் இல்லை எனவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
வோளாண் சட்டங்களை பெரும்பான்மையான மாநிலங்கள் எதிர்க்கும் போது அதிமுக மட்டும் ஆதரவு அளித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் அதனால் திமுகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்
இதேவேளை தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசு முறை பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.