July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தான் மீதான விமானத் தாக்குதல் : தகவல்கள் வெளியானமை குறித்து விசாரணைகளைக் கோரும் இந்திய எதிர்க்கட்சிகள்

photo: Facebook/ Iftekhar Khan
இந்தியா, பாக்கிஸ்தான் மீது விமானத்தாக்குதல்களை மேற்கொள்ளப்போகின்ற விடயத்தினை இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர் அறிந்திருந்தது எப்படி என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என இந்திய எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் பிரதம ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் குறுஞ்செய்திகளில் இந்தியத் தாக்குதல் மேற்கொள்ளப்போகும் விடயம் காணப்பட்டது எவ்வாறு என்பது குறித்து சர்ச்சை மூண்டுள்ள நிலையிலேயே இந்திய எதிர்க்கட்சிகள் இது குறித்த விசாரணைகளைக் கோரியுள்ளன.
அர்ணாப்கோஸ்வாமி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பின் நிறைவேற்றதிகாரியிடம் இந்தியா விமானத்தாக்குதல்களை மேற்கொள்ளப்போகின்றது இது வழமையான தாக்குதலை விட பெரியதாகக் காணப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா தாக்குதல்களை மேற்கொள்வதற்கு மூன்று நாட்களிற்கு முன்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் பாக்கிஸ்தான் மீது தாக்குதலை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் நம்பிக்கையுடன் உள்ளது என அர்ணாப் தெரிவித்துள்ளார்.
அர்ணாப்பிற்கு எதிராக மும்பாய் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டில் இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள அர்ணாப் புல்வாமா தாக்குதலிற்குப் பின்னர் பாக்கிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை மேற்கொள்ளும் என்பது நன்கு அறியப்பட்ட விடயம் என தெரிவித்துள்ளார்.
இந்தியத் தேசியவாதிகள் அனைவரது மனதிலும் இது குறித்த சந்தேகமிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.