July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியா: தடுப்பூசி ஏற்றப்பட்ட 2 லட்சத்து 25 ஆயிரம் பேரில் 450 பேருக்கு சாதாரண எதிர்மறை அறிகுறிகள்

இந்தியாவில் நேற்று சனிக்கிழமை முதல் இதுவரையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்ட சுமார் இரண்டு லட்சத்து 25 ஆயிரம் பேரில் 450 பேரளவில் சாதாரண ‘எதிர்மறை விளைவுகளை’ வெளிப்படுத்தியுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, குமட்டல் போன்ற லேசான அறிகுறிகளை ஏற்பட்டுள்ளன. மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் தடுப்பூசி ஏற்றப்பட்ட 4000 பேரில் 51 பேர் சாதாரண எதிர்மறை விளைவுகளை வெளிப்படுத்தினர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு சற்று மோசமான விளைவை வெளிப்படுத்தியுள்ளார்.

22 வயதான அந்த நபர் நேற்றிரவு வரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக டெல்லியின் சுகாதார அமைச்சர் சத்தியேந்தர் ஜெய்ன் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய தடுப்பூசி-ஏற்றும் திட்டத்தை இந்தியா நேற்று ஆரம்பித்தது.

முதற்கட்டமாக, சுகாதார மற்றும் முன்-களப் பணியாளர்கள் மூன்று கோடிப் பேருக்கு தடுப்பூசி அளிக்கப்படவுள்ளது.

அடுத்த கட்டமாக, 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 50 வயதுக்குட்பட்ட உடல் ஆரோக்கிய பாதிப்புள்ளவர்கள் 27 கோடிப் பேருக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.