July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் கொரோனா தடுப்பூசித் திட்டம் ஆரம்பம்: துப்புரவுப் பணியாளருக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டது

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியை இன்றையதினம் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக உரையாற்றி, ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்தியாவின் முதலாவது தடுப்பூசி துப்புரவுப் பணியாளர் ஒருவருக்கு ஏற்றி, இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள 3,006 தடுப்பூசி மையங்களில், தலா நூறு பேர் வீதம் சுமார் மூன்று இலட்சம் பேர் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முதலில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி ஆரம்பமாகியுள்ளதுடன், துப்புரவுப் பணியாளர் ஒருவருக்கே முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை சுமார் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமானோர் கொவிட்- 19 வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கொவிஷீல்ட், பாரத் பயோட்டெக் நிறுவனம் தயாரித்த கொவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மூன்று கோடி சுகாதார பணியாளர்களுக்கு மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை இந்தியா இன்று ஆரம்பித்துள்ளது.

இந்தியாவின் 700 மாவட்டங்களில் ஒன்றரை இலட்சம் பணியாளர்களுக்கு மருந்துகளை வழங்குவது குறித்த விசேட பயிற்சி வழங்கப்பட்டுள்ளடன் பல ஒத்திகைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாடு முழுக்க ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.

மேலும் தமிழத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.