பொங்கலை முன்னிட்டு தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டது தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
பொங்கலை முன்னிட்டு சென்னை வந்த பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார் .
சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அவர் கலந்து கொண்டார்.
அவர் தமிழர் பாரம்பரியப்படி வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டது அனைவரையும் கவர்ந்தது.
அப்போது பேசிய அவர், தொன்மையான மொழியாக தமிழ் இருப்பதாகவும் தமிழரின் கலாசாரம் இல்லாமல் இந்திய கலாசாரம் முழுமையடையாது என்றும் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் உலக முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆழ்வார்கள்,நாயன்மார்களால் தமிழகத்தில் பக்தி இலக்கியம் செழித்தோங்கியதாகவும் புகழ்ந்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாகவும் துக்ளக் இதழின் 51வது ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காகவும் சென்னை வந்திருந்தார்.
இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்தியில் ஆளும் இரு முன்னணி கட்சிகளின் தலைவர்கள் ஒரே நாளில் தமிழகத்தை நோக்கி வருவதென்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வருகையும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டாவின் வருகையும் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டக் களம் தான் என விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் தனித்துவமான ஆளும் கட்சி இருக்கும் நிலையில் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தை நோக்கி வருவது அரசியல் காய் நகர்த்தும் திட்டம் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,அரசியல் வியூகங்களை வகுத்து தேசிய கட்சி தலைவர்கள் தமிழகம் வந்து செல்வது ஏனைய கட்சித் தலைவர்களுக்கு தலையிடியை தந்திருக்கலாம்.