July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் மாவட்ட ரீதியாக கொரோனா தடுப்பூசி விநியோகம்

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகளுக்காக தமிழகத்திற்கான தடுப்பூசி மருந்துகள் இன்று சென்னைக்கு கொண்டுவரப்பட்டன.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட், கொவிஷீல்ட் என்ற பெயரில் தயாரித்துள்ளது.

இந் நிலையில் பூனேவில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த தடுப்பூசியை எதிர்வரும் 16ஆம் திகதி முதல் நாடு முழுவதும் மக்களுக்கு வழங்கும் பணிகள் தொடங்கவுள்ளது.

இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கும் பின்னர் 50 வயதை கடந்தவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கும் இந்த தடுப்பூசி போடப்படவுள்ளது.

தமிழகத்தில் முதல் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்க இருக்கும் நிலையில்,  முதற்கட்டமாக 5.56 இலட்சம் தடுப்பூசி மருந்து டோஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தடுப்பூசி போடும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருவதுடன் தடுப்பூசிகளை வைப்பதற்கு குளிர்பதன வசதிகளை ஏற்படுத்துதல், ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் இல்லை எனவும் அவரவர் விருப்பத்தின் பேரில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமாக, அனைத்து மாவட்டங்களிலும் 190 மையங்களில் 2 கட்டங்களாக தடுப்பூசி திட்ட ஒத்திகை நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணிகளை தொடங்குவதற்கான தயார் நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்போது மாவட்ட ரீதியாக கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்த தகவல்களை சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.