November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய வேளாண் சட்டங்களுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு இந்திய உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.

மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த 45 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் இன்றையதினம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள் அமர்வு புதிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர்.

மேலும், மறு உத்தரவு வரும் வரை வேளாண் திருத்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

“எங்களுக்கு உள்ள அதிகாரத்தின் மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க நாங்கள் முயற்சிப்போம். இந்த சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்து இது தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க குழு அமைக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது” எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

முன்னதாக, வேளாண் திருத்தச் சட்டங்கள் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண உச்ச நீதிமன்ற மேற்பார்வையில், 4 பேர் கொண்ட குழு அமைத்து நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.