November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வேளாண் சட்டங்களை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும்’ : உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்காவிட்டால், அதனை நிறுத்தி வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என இந்திய உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை போராட்டக்களத்திலிருந்து வெளியேற்றுவது தொடர்பான வழக்கினை ஆராய்ந்தவேளை உச்சநீதிமன்றம் இதனைத் தெரிவித்துள்ளது.

வேளாண் திருத்தச் சட்டங்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்காவிட்டால், சட்டத்தை அமுல்படுத்துவதை எங்களால் தடை செய்ய முடியும் என நீதிபதி போப்டே குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வேளாண் திருத்தச் சட்டங்கள் சிறந்தவை என இதுவரை ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண குழு அமைக்கவும் தலைமை நீதிபதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இக்குழு இருதரப்பு கருத்துகளையும் ஆராய்ந்து பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் நீதிபதி கேட்டுக்கொண்டார்.

அத்தோடு விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கையாளும் விதம் ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ள நீதிபதி பேச்சுவார்த்தை குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தை தொடரலாம். ஆனால், அதே இடத்தில் போராட்டம் தொடர வேண்டுமா என்பது தான் முக்கிய கேள்வியாகவுள்ளது. இதில் ஏதாவது தவறு நேர்ந்தால், நாம் அனைவருமே அதற்கு பொறுப்பு கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உத்தரவுகள் மூலம் எதையும் சாதித்து விடலாம் என்று மத்திய அரசு நினைக்கக் கூடாது என்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் கடுமையாக சாடியுள்ளனர்.

எனினும் 3 வேளாண் திருத்தச் சட்டங்களையும் நிறுத்தி வைக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.