‘நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் போராட்டம் நடத்தி, என்னை மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வரப்போவதில்லை என ஏற்கனவே அவர் அறிவித்திருந்த நிலையில் “ரஜினி மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும்” என, நேற்று சென்னையில் அவரது ரசிகர்கள், வேண்டுகோள் விடுத்து, போராட்டம் நடத்தியிருந்த நிலையிலே அவர் மீண்டும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
“நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பில் இருந்தும், மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்.
தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது. மேலும் நான் ஏன் இப்போது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே, விரிவாக விளக்கியுள்ளேன்.
நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்கி, வற்புறுத்த வேண்டாம் எனவும் ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.