November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

16ம் திகதி இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து விநியோகம் ஆரம்பம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் 16 ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் கொரோனா வைரஸ் நிலவரம் மற்றும் மருந்து வழங்கல் குறித்து சிரேஸ்ட அதிகாரிகளுடன் ஆராய்ந்ததன் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பை கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மருந்து வழங்கல் ஆரம்பமாகும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், துணிச்சலான மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் ,முன்னிலை பணியாளர்களிற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இரண்டு கோடி முன்னிலை பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் மருந்து வழங்கல் நடவடிக்கையில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன் பின்னர் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு மருந்தினை வழங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்கட்டமாக 30 கோடி பேருக்கு மருந்தினை வழங்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா மருந்தினை இலவசமாக வழங்கவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.